Wednesday 1 February 2017

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?- உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கம்


பிளாஸ்டிக் முட்டையை இனம் கண்டறியும் விதம் குறித்து நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் சில கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன், புகார் செய்யப்பட்ட கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். ஆனால், அங்கு விற்கப்படுபவை பிளாஸ்டிக் முட்டைகள் அல்ல என்பது தெரியவந்தது.
பின்னர், பிளாஸ்டிக் முட்டை கண்டறியும் விதம் குறித்து அவர் கூறியது: பிளாஸ்டிக் முட்டையாக இருக்கும்பட்சத்தில், அதை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசியவுடன், சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொள்ளும்.
முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும்.
மேலும், முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.
இதுபோன்ற அம்சங்களை வைத்து சாதாரண முட்டைக்கும், பிளாஸ்டிக் முட்டைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்கலாம். முட்டை குறித்து சந்தேகமிருப்பின், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட மக்கள் 9442214055 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அன்பழகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நாகப்பட்டினம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மஹாராஜன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment